Tuesday, 9 August 2011

கேள்வி பதில் - ஓஷோ

கேள்வி பதில் - ஓஷோ

அன்பிற்குரிய பகவான், பழம் பழுத்து விடும் போது அது பூமியில் விழுகிறது. ஒரு நாள் நீங்கள் எங்களை விட்டு சென்று விடுவீர்கள். உங்களை போன்ற மற்றொரு குருவை உங்களுடைய இடத்தில் பெறுவது என்பது இயலாத காரியம். பகவான், நீங்கள இந்த பொருளுடலை விட்டு செல்லும்போது, உங்கள் தியான முறைகள் இப்போது போலவே எங்கள் உள்ளார்ந்த வளர்ச்சிக்கு உதவுமா?

உங்கள் வளர்ச்சிக்கான எனது வழி, நீங்கள் என்னிடமிருந்து விடுபட்டு செல்ல வேண்டும் என்பதுதான்.

எந்தவிதமான சார்ந்து நிற்றலும் அடிமைத்தனம் ஆகும். இதில் மிக மோசமான அடிமைத்தனம் ஆன்மிகஞ்சார்ந்த நிற்றல்தான்.

நான், நீங்கள் உங்கள் தனித் தன்மையை, உங்கள் சுதந்திரத்தை, யாரிடமிருந்தும் எந்த உதவியுமின்றி வளர்வதற்கு உங்களிடமுள்ள முழுமையான செயல் ஆற்றலை நீங்கள் உணர்ந்து கொள்வதற்கான எல்லா முயற்சிகளையும் செய்து வந்துள்ளேன்.

உங்கள் வளர்ச்சி என்பது உங்கள் உயிருருவின் உள்ளே அமைந்த ஒன்று. அது வெளியிலிருந்து வருவதல்ல, அது சுமத்தப்படும் ஒன்று அல்ல, அது ஒரு விரிதல்.

நான் உங்களுக்கு கொடுத்துள்ள எல்லா தியான முறைகளும் என்மீது சார்ந்தவை அல்ல எனது முன்னிலையோ அல்லது இல்லாமையோ எந்த ஒரு வேறுபாட்டையும் ஏற்படுத்தாது அவை உங்கள் மீது சார்ந்தவை. என்னுடைய முன்னிலையல்ல. மாறாக உங்களுடைய முன்னிலைதான் அவை வேலை செய்வதற்கு தேவை.

நான் இங்கு இருப்பது அல்ல, மாறாக நீங்கள் இங்கே இருப்பதுதான். நீங்கள் இங்கே நிகழ்காலத்தில் இருப்பதும், நீங்கள் விழிப்புடனும் தெரிநிலையில் இருப்பதும் தான் இங்கே உதவி செய்யப் போகிறது.

என்னால் உங்களது கேள்வியையும் அதன் தொடர்பையும் புரிந்து கொள்ள முடிகிறது. அது தொடர்பற்ற ஒன்று அல்ல.

மனிதனின் முழுக் கடந்த காலமும் பல்வேறு வழிகளில் சுரண்டுதலின் ஒரு சரித்திரமாகும். ஆன்மீக மக்கள் என்று அழைக்கப்பட்டவர்களால் கூட சுரண்டலை செய்யும் தூண்டுதலை ஏற்க மறுக்க முடியவில்லை. நூறு குருக்களிலே தொண்ணூற்று ஒன்பது குருக்கள் இந்த கருத்தை வலியுறுத்த முயற்சி செய்து கொண்டிருந்தனர். நானில்லாமல் உங்களால் வளர முடியாது, எந்த முன்னேற்றமும் சாத்தியமில்லை. உங்களது முழுப்பொறுப்பையும் என்னிடம் கொடுத்து விடுங்கள்.

ஆனால் உங்களது முழுப் பொறுப்பையும் வேறு ஒருவரிடம் நீங்கள் கொடுத்து விடும் தருணத்திலே உங்கள் முழு சுதந்திரத்தையும் தெரியாமலே நீங்கள் கொடுத்து விடுகிறீர்கள்.

மேலும் இயற்கையாக அந்த எல்லா குருக்களும் ஒரு நாள் இறந்து போக நேரிட்டது. ஆனால் அவர்கள் மிக நீளமான வரிசையாக அடிமைகளை விட்டு சென்றுள்ளார்கள். கிறித்தவர்கள், யூதர்கள், இந்துக்கள், முகமதியர்கள். இந்த மனிதர்கள் யார்? ஏன் ஒருவர் கிறித்தவராக இருக்க வேண்டும்? நீங்கள் யாராகவேனும் இருக்க முடிந்தால், ஒரு கிறித்துவாக இருங்கள். ஒரு போதும் கிறித்தவனாக இருக்காதீர்கள். உங்களை ஒரு கிறித்தவன், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் இறந்து போன ஒருவரை பின்பற்றுபவன் என்று கூறி கொள்ளும் போது அதன் அவமானத்திற்கு முற்றிலும் குருடாகவா இருக்கிறீர்கள்? முழு மனித குலமும் இறந்து போனவர்களை பின்பற்றி கொண்டு உள்ளது.

உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் செத்துவிட்டவர்களை பின்பற்றி கொண்டிருப்பதும், உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மீது செத்து விட்டவர்கள் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருப்பதும், உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் செத்து விட்டவர்களையும் நாங்கள் உங்களை காப்பாற்ற வருவோம் என்ற அவர்களது வாக்குறுதிகளையும் சார்ந்து நின்று கொண்டிருப்பதும் விநோதமாக இல்லையா?

அவர்களில் யாரும் உங்களை காப்பாற்ற வரவில்லை. உண்மையில் யாரும் பிறர் யாரையும் காப்பாற்ற முடியாது. அது தனித்தன்மை மற்றும் சுதந்திரம் இவற்றின் அடிப்படையான உண்மைக்கு மாறாக செல்கின்றது.

என்னை பொறுத்தவரையில் நான் உங்களை எல்லாரிடமிருந்தும்-என்னிடமிருந்தும் கூட விடுவிக்கவும் தேடுகின்ற பாதையில் வெறுமே தனித்து நிற்கவும் செய்ய எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டு இருக்கிறேன்.

உண்மையை தேடும் காரியத்தில் தனியாக நிற்கும் துணிச்சல் கொண்ட நபரை இந்த உயிர் வாழ்தல் மதிக்கிறது. அடிமைகளை உயிர் வாழ்தல் மதிப்பதே இல்லை. அவர்கள் எந்த மரியாதைக்கும் தகுதியானவர்களே இல்லை. அவர்கள் தங்களையே மதிப்பதில்லை. உயிர் வாழ்தல் தங்களை மதிக்க வேண்டும் என்று அவர்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்?

எனவே நினைவில் கொள்ளுங்கள் நான் சென்று விட்ட பின் நீங்கள் எதையும் இழக்க போவதில்லை. ஒருவேளை உங்களுக்கே முழுமையாக தெரியாத ஏதோ ஒன்றை நீங்கள் பெற்று கொள்ள கூடும்.

இப்போது ஒரு குறிப்பிட்ட உருவத்திலும் வடிவத்திலும் சிறைப்பட்டு உடல் பெற்ற வகையில் நான் உங்களுக்கு கிடைத்திருக்கிறேன். நான் சென்ற பிறகு நான் எங்கே போக முடியும்? இங்கே இந்த காற்றில் கடலில் நான் இருப்பேன். நீங்கள் என் மீது அன்பு செலுத்தியிருந்தால் என்னில் நம்பிக்கை கொண்டிருந்தால் என்னை ஓராயிரம் வழிகளில் உணர்வீர்கள். உங்களது மெளனமான நேரங்களில் சட்டென்று எனது முன்னிலையை உணர்வீர்கள்.

நான் எனது உடலை இழந்து விட்ட பிறகு எனது உணர்வு நிலை பிரபஞ்சத்தினுடையது ஆகிவிடும்.

இப்போது நீங்கள் என்னிடம் வர வேண்டியுள்ளது.

பின்னர் நீங்கள் என்னை தேடவோ நாடவோ தேவையிருக்காது. நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் தாகம் அன்பு என்னை நீங்கள் உங்கள் இதயத்திலே இதயத்துடிப்பிலே என்னை கண்டறிவீர்கள்.

No comments:

Post a Comment