Saturday 20 August 2011

சித்த மருத்துவம்
 
          தொல் தமிழர்கள் தங்கள் நலன் காக்கவும், நோய் தடுக்கவும், நோய் தீர்க்கவும் கண்டுபிடித்ததும், வளர்த்ததும், கடந்த 50,000 ஆண்டுகளாக வளர்ந்துக் கொண்டிருப்பதுமான நலத்துறை மற்றும் மருத்துவமுறைகள் தாம் தமிழ் மருத்துவம் என அழைக்கப்படுகிறது. தொல் சித்தர்கள் பயன்படுத்தி உலகுக்குக் காட்டிய முறையாதலின் இது சித்த மருத்துவம் எனவும் பெயர்பெற்றது. சித்தர்கள் பொதுவாக மலைகளிலும், குகைகளிலும் தனித்து வாழ்ந்து வந்தனர். எனவே, இம்மருத்துவச் சொல் அகராதிக்கு மலையகராதி என்ற பெயரும் உண்டு. அரிய மணிகளால் செய்யப்பட்ட மருந்துமுறை என பொருள்படுமாறு சிந்தாமணி அல்லது தெய்வமணி எனவும் இதனை வழங்குவர்.
            பேரண்டம் என்று அழைக்கப்படும் பிரபஞ்சம் கோடானுகோடி கோள்களின் தொகுதிகளின் மூலக்கூறுகள், நிலம், நீர், தீ, வளி, வெளி என்ற ஐந்து பூதங்கள் கலந்த பொருள்களாம். இவை, நம் உடலிலுள்ள 5 அடிப்படைக் கூறுகளாகும். அண்டத்திலுள்ளது பிண்டத்தில் என்ற முறையில் உடல் அண்டக் கோடுகளோடு இயைந்துள்ள கருவி என்பது சித்த மருத்துவ அடிப்படைக் கோட்பாடு. 

            இந்த உடல் உயிரால் உய்க்கப்படுகிறது. உயிர் அழிவற்றது. உடல் அழியும் தன்மைத்து. பொதுவாக நோய் நொடியில்லா இயற்கை வாழ்வு வாழும் மனிதர்கள் 120 ஆண்டுகள் வாழ்வர். தமிழ் மொழியில் மட்டும் 6 தலைமுறைகளுக்கான உறவுப் பெயர்கள் உள்ளன. பேரன், மகன், அப்பன், பாட்டன், பூட்டன், ஓட்டன் போன்றவை அவை.

            உடற்கூறுகள், உறுப்புகள் பற்றி தொல் தமிழரிடையே தெளிவான கருத்துக்கள் விளங்கி வந்துள்ளன. உடல், உயிர், மனம் ஆகியவற்றின் வளர்ச்சி, கருவளர்ச்சி, தாய்மை போன்ற அனைத்து இயற்கைக் கூறுகளும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியருக்கு முற்பட்ட காலங்களிலேயே இம்முறைகள் வளர்ச்சியடைந்திருந்தன.

நாளொன்றில் மனிதன் 21600 முறை மூச்சு விடுகிறான் என்பது மிகவும் துல்லியமான அளவீடு. நவீன மருத்துவம் நம் மூச்சு வேகம் நிமிடம் ஒன்றுக்கு 12-16 வரை என அளவிட்டுள்ளது. உரோமரின் கணக்கு நிமிடத்திற்கு 15 முறை எனக் கூறுகிறது.

            நோயாளியின் மனநிலை, குடும்பச்சூழல், உடல்நிலை, உணவுப்பழக்கம் என்ற வகையில் ஆராய்ந்து எண் பரிசோதனை செய்து முடிவாக நாடிச் சோதனை செய்து, தக்க மருந்துகள் கொடுப்பார்கள். உணவு பத்தியம், வாழ்வியல் மாற்றங்கள் தெளிவாக அறிவுறுத்துவார்கள்.
            மருந்துகளும் ஒவ்வொரு நோயாளிக்கும் அன்றன்று செய்யப்பட்டு அன்றே கொடுக்கப்படும். ஒருவருக்குக் கொடுப்பதை மற்றவர்க்கு கொடுப்பது இல்லை.

            மூலிகைச் செடிகள், இலைகள், தண்டு, பூக்கள், காய்கனிகள், வேர், பட்டை எனப் பயன்படுத்தி, புடமிட்டு சாறுகள் சேர்த்து கொடுக்கப்பட்டன.
 ஒவ்வொரு மருத்துவரும் ஆசிரியரின் உதவியோடு பயின்று பண்டுவம் செய்வர். மருந்தாக்கியல் முறைகள், மிகக் கட்டுப்பாடானவை, தூய்மைத்தன்மை, வீரியம் என்பன தெளிவாக நிர்ணயிக்கப்படும். சித்த மருத்துவத்தில் சிறப்பு மருத்துவ முறைகளாக வர்மக்கலை, கட்டுகழங்கு, முப்பு, மணி போன்றவை வேறெங்கிலும் காணக் கிடைக்காதவை.

No comments:

Post a Comment