எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
என்ற ஒற்றைக் குறளைக் கொண்டே உலகப்புகழ் பெற்றவர் கிரேக்கத்தின் சாக்ரடீஸ். ஆறாவது அறிவு என்பது எதையும் அலசி ஆய்வதற்குத்தான் என்பதை அகிலத்துக்கு அறிவித்த அறிஞர்.
இந்த முயற்சியில் இவர் சந்தித்த எதிர்ப்புகள் ஏராளம்.
மனைவிக்கே பிடிக்காது இவருடைய விவாதங்கள். கோபத்தில்
வார்த்தைகளைக் கொட்டுவதோடு நிற்காமல் குடம் நிறைய தண்ணீரையே சாக்ரடீஸின் தலையில் கொட்டுவதுண்டு.
சராசரிக் கணவரில்லையே சாக்ரடீஸ். “ஆகா! முதலில் இடி, இப்போது மழை” என்பார் படுகூலாக.
மனைவியின் எதிர்ப்பு இப்படி. மன்னனின் எதிர்ப்பு எப்படி?
“இந்த தத்துவபோதனைகளை விட்டுவிடு. அல்லது விஷத்தை அருந்தி மரணத்தைத் தொட்டுவிடு” – கட்டளையிட்டது அரசு.
சராசரி குடிமகன் இல்லையே சாக்ரடீஸ். தனது தத்துவங்களின் பெருமைக்கு முன் பெரியதல்ல உயிர் என்று உலகிற்கு உணர்த்துவதற்காகவே மகிழ்வோடு ஏற்றார் மரணத்தை.
உள்ளம் கொண்ட லட்சியத்திற்காக உயிரையும் விட்ட சாக்ரடீஸ் உலகத்தார் உள்ளங்களில் இன்றளவும் வாழ்வதில் என்ன வியப்பு?